நான் கற்ற கல்வி
என் சமூக மக்களின்
விடுதலைக்குப்
பயன்படவில்லையெனில்
என்னை நானே சுட்டுக்கொள்வேன்
- புரட்சியாளர் அம்பேத்கர்.

Friday, July 15, 2011

பகிரங்கமாக மன்னிப்பு கேட்போம்!

நவீன ஆடைகளும், நுனிநாக்கு ஆங்கிலமும் அறிவியல் கண்டுபிடிப்பு சாதனங்களை குறிப்பாக செல்போன், மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றை உடைமையாக்கி வைத்திருப்பதே நாகரீகம் என கற்பிக்கப்பட்டிருக்கிற இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தின் கோரமான வெளிப்பாடுதான் கோவை மாநகர போக்குவரத்து சிக்னலில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞரின் மரணம். நான் அந்த இடத்தில் இல்லை என்று காரணம் சொல்லி தப்பித்து விட முடியாது. கண்ணுக்கு எட்டுகிற தூரத்தில் கூட அல்ல, கைக்கு எட்டுகிற தூரத்தில் ஒரு சக மனிதனை கல்லால் அடித்துக் கொல்லபபடுகிற போதும் கூட எந்தவித சமூகப்பிரக்ஞையும் இல்லாமல் வேடிக்கை பார்க்கிற கோவை மாநகரவாசிகளில் நாமும் ஒருவரா என்கிற கேள்வி இதயத்தை துளைக்கிறது. பேச்சில் கூட மரியாதை காட்டுகிற கோவை மாநகர வாசிகளின் மனிதாபிமானம் கிழிந்து தொங்குகிறது. மது குடிப்பதையும் புகை பிடிப்பதையும் "ஆண் குணமாக" மாற்றி வைத்திருக்கிற சினிமா ஊடகத்தின் வெற்றிதான் இந்த பச்சைப் படுகொலை. சக மனிதனின் மீதான தாக்குதலை வேடிக்கை பார்க்குமளவு மரத்துப்போன சமூகமாக மாறிவிட்டோமா என்கிற கனத்த இதயங்களோடு கொலையுண்ட இளைஞரின் குடும்பத்தை நோக்கி பகிரங்கமாக மன்னிப்பு கேட்போம்! சக மனிதர்களை நேசிக்கிற குணத்தை இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் வளர்த்தெடுக்க உறுதியேற்போம்!!

Tuesday, July 5, 2011

தீண்டாமையை கடைபிடிப்போரின் புதிய கண்டுபிடிப்பு.

உலகிலேய பாரம்பரியமான கலாசார பின்னணியும் கொண்டதாக பெருமை பீற்றிக்கொள்ளும் நாடு இந்தியா. இந்தியாவில் சமூகநீதிக்கு களம் அமைத்துக்கொடுத்ததாக பெருமை பீற்றிக்கொள்ளும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் அமைதிப்பூங்காவாக சாதிக்கலவரம் ஏதும் நடைபெறாததாக பீற்றிக்கொள்ளும் மண்டலம் மேற்கு மண்டலம் (கொங்கு மண்டலம்). அந்த கொங்கு மண்டலம்தான் இந்த 21 ம் நூற்றாண்டில் தீண்டாமையை கடைப்பிடிக்கும் சாதிவெறிக் காட்டுமிராண்டிகளுக்கு தீண்டாமையின் புதிய வடிவத்தை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

இரட்டை டம்ளர், இரட்டை சுடுகாடு, இரட்டை சலூன், இரட்டை பென்ச், என விதவிதமான இரட்டைகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால். இந்திய தீண்டாமை வரலாற்றில் முதல்முறையாக ...? இரட்டை பஸ் முறையை கண்டுபிடித்து கொடுத்திருக்கிறார்கள்.

கோவை மாவட்டத்தின் மேற்கு எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மற்றவர்களின் கண்களுக்கு பசுமையாகவும் குளிர்ச்சியாகவும் தலித்துகளின் ரத்தத்தையும் உழைப்பையும் வெட்கமில்லாமல் வழித்து நக்கி குடித்து வளமாக்கி வைத்துள்ளதால் தலித்துகளின் கண்களுக்கு எரிச்சலையும் ஏற்படுத்தக்கூடிய வயல்வெளிகள் நிறைந்த கிராமங்களில் ஒன்றுதான் தொண்டாமுத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கெம்பனூர் கிராமம். இக்கிர்ரமத்தில் சுமார் 500 ஒக்கலிகர் குடும்பங்களும் சுமார் 10 போயர் குடும்பங்களும் சுமார் 350 அருந்ததியர் குடும்பங்களும் வசித்து வருகின்றனர். பெரும்பாலான ஒக்கலிகர் குடும்பங்கள் நிலம் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். 3 குடும்பங்கள் தவிர அருந்ததியர்கள் யாருக்கும் நிலம் இல்லை. பெரும்பாலும் நகரங்களுக்கு பெயிண்டிங் பிளம்பிங் கட்டிட வேலை போன்ற பணிகளுக்கு செல்கின்றனர்.

கெம்பனூர் கிராமத்திற்கு கோவையிலிருந்து விடப்பட்ட அரசுப்பேருந்து 64 டி. அந்த பேருந்து கெம்பனூர் கிராமத்திற்கு வரும்போதெல்லாம் கெம்பனூர் எல்லைக்கு 200 மீட்டர் தொலைவில் உள்ள ஊருக்குள்ளேயே நின்று விடும். கிராமத்தின் எல்லையில் சேரியில் இருப்பவர்கள் 200 மீட்டர் நடந்து சென்று பேருந்தில் ஏறி நகரத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் இந்த கிராமத்தை உள்ளடக்கிய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று எட்டு கொங்கு வேளாளர் கவுண்டர் சாதியை சேர்ந்த தமிழக அமைச்சர்களில் ஒருவராக பொறுப்பேற்ற எஸ் பி வேலுமணி நன்றி தெரிவிப்பதற்காக கெம்பனூர் வந்தார். கெம்பனூர் கிராமத்திற்கு கோவையிலிருந்து விடப்பட்டிருக்கும் அரசுப்பேருந்து 64 டி எல்லை வரைக்கும் வராமல், ஊருக்குள்ளேயே நின்று விடுவதைக் கூறி பேருந்தை முறையாக இயக்க வேண்டுமென சேரிமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். அமைச்சரும் பின்விளைவுகள் ...? ஏதும் அறியாமல் உடனே அதிகாரிகளை அழைத்து பேருந்துகளை முறையாக இயக்குமாறு உத்தரவிட்டு சென்று விட்டார். பேருந்து சரியாக மூன்று முறை கிராம எல்லையான சேரி வரைக்கும் சென்று திரும்பியது.

பேருந்து சேரி வரை சென்று திரும்பியதால் தலித்துகளுக்கு இந்த முறை உட்கார்ந்து பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. ஊர் பேருந்து நிறுத்தத்தில் ஏறியவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தலித்துகள் உட்கார்ந்து கொண்டும் சாதிவெறியர்கள் நின்று கொண்டும் பயணிக்க பொறுக்குமா சாதிவெறியர்களுக்கு? நான்காவது முறையாக பேருந்து வரும்போது, கடல் தாண்டியும் வாழ்கிற தமிழர்களின் உரிமைக்குரலான ...? ம.தி.மு.க வின் மாவட்ட துனைச்செயலரும் ஒக்கலிகர் மகாஜன சங்கத்தின் மாநில இளைஞர் அணி செயலருமான கதிரவன் தலைமையில் ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு சாலை மறியல் செய்ததோடு இனிமேல் பேருந்து சேரிப்பக்கம் போகக்கூடாது என மிரட்டினர். அதிகாரிகள் வழக்கம் போல தலையிட்டு இனிமேல் பேருந்து சேரிப்பக்கம் செல்லாது என உத்தரவாதம் தந்து அவ்வாறே நடைமுறைப்படுத்தினர். அடுத்த நாள் அனைத்து பத்திரிகைகளும் சாதி பிரச்னையைஎல்லாம் மூடிமறைத்து ஏதோ இரண்டு வெவ்வேறான ஊர்களுக்கு இடையில் நடந்த பிரச்னை போல செய்தி வெளியிட்டு அனைத்து ஊடகங்களும் தங்களது சாதிப்பாசத்தை உறுதிப்படுத்திக்கொண்டன.

அமைச்சர் கொடுத்த உத்தரவு ஒரே நாளில் காற்றில் பறக்க விடப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த தலித்துகள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அமைச்சர் கொடுத்த உத்தரவை நிறைவேற்ற வேண்டி கோரிக்கை விடுத்தனர். முந்தைய நாள் ஊர் மக்களின் மறியலை செய்தியாக்கிய அனைத்து நாளிதழ்களும் (தீக்கதிர் நீங்கலாக ) சேரி மக்களின் போராட்டத்தை செய்தியாக வெளிவிடாமல் பார்த்துக்கொண்டது.

சேரி மக்களின் போராட்டத்துக்கு பிறகு வழக்கம்போல நடந்து முடிந்த அநீதிக்கு தண்டனை என்பதையெல்லாம் மறந்து இனிமேல் பிரச்னை வராமல் இருக்க சமாதான கூட்டத்தை நடத்தி உலகளாவிய கண்டுபிடிப்பாக ஒரு சமரச முயற்சிக்கு கொண்டு வந்தனர். அதுதான் "இரட்டை பஸ்".
ஒரே வழித்தட எண் (64 d ) கொண்ட அரசுப்பேருந்து 6 முறை சேரிக்கும் மீதமுள்ள முறைகள் ஊருக்குள்ளும் வரும் என அதிமேதாவித்தனமான முடிவுக்கு காவல்துறை இருதரப்பினரையும் ஒப்புக்கொள்ள வைத்து தங்களை வழிநடத்தும் இந்திய அரசியல் சாசனத்துக்கு மன்னிக்கவும் மனுதருமத்துக்கு உண்மையாக நடந்து கொண்டனர்.

அவ்வாறாக ஒப்புக்கொண்ட பின்னரும் கூட காவல்நிலையத்தில் ஏற்படுத்தப்பட்ட முடிவை காற்றில் பறக்க விட்டு ஒரே ஒரு முறை மட்டும் அரசு பேருந்து சேரிக்குள் வந்து செல்கிறது. சேரி மக்கள் பயன்படுத்தும் அந்த பேருந்தை பெரும்பாலும் ஊர் மக்கள் பயன்படுத்துவது இல்லை, ஆக தலித்துகளுக்கு ஒரு பேருந்து ஆதிக்க சாதிவெறியர்களுக்கு ஒரு பேருந்து என கெம்ப னூர் சரியான இந்து கிராமமாக இருக்கிறது.

என்னது ..? இரட்டை வாக்குரிமையா..? அது நாங்கள் மேடையில் பேசும்போது பயன்படுத்துவதோடு சரி...!

--
Entrum saathi ozhippu paniyil,
Neelaventhan
9443937063
http://aathithamilan.blogspot.com/