நான் கற்ற கல்வி
என் சமூக மக்களின்
விடுதலைக்குப்
பயன்படவில்லையெனில்
என்னை நானே சுட்டுக்கொள்வேன்
- புரட்சியாளர் அம்பேத்கர்.

Tuesday, April 17, 2012


சமூக நீதியும் மனுதருமமும்

சமூக நீதி என்கிற மகத்தான சொல் சிலரின் பெயருக்கு முன்னால் ஒட்டாக இருப்பதினாலேயே மலினப்பட்டுப் போயிருக்கிறது. சமூக நீதி என்பது சமநீதி என்கிற சொல்லைக்காட்டிலும் ஆயிரமாயிரம் மடங்கு அர்த்தம் பொதிந்த சொல்லாகும். சமமில்லாத இருவரை சமமாக நடத்துவது சம்மாகாது என்பதே சமூக நீதியின் அடிப்படை இலக்கணமாகும். ஒரு வறண்டு போன குளம் ஒரு இடத்தில் மேடாகவும், ஒரு இடத்தில் பள்ளமாகவும், ஒரு இடத்தில் நடுத்தரமாகவும் இருக்கும். அந்த ஏற்றத்தாழ்வான இடத்தை நீர் இட்டு சமமாக நிரப்ப வேண்டுமானால், ஆழமான இடத்தில் அதிகமான நீரையும் மேடான இடத்தில் குறைவான நீரையும் நடுத்தரமான இடத்தில் நடுத்தரமான அளவு நீரையும் விட்டு நிரப்ப வேண்டும்.

ஒரு கூட்டத்தில் இருக்கிற 100 பேருக்கு ஆளுக்கு 5 ரூபாய் கொடுப்பது சமத்துவமாக நடத்துவதற்கு ஒப்பானதாகும். ஆனால், ஒவ்வொருவரிடமும் ஏற்கனவே 5 ரூபாயோ 10 ரூபாயோ 50 ரூபாயோ 100 ரூபாயோ இருக்குமானால், அவர்களிடையே நிலவும் அசமத்துவம் நீடிக்கவே செய்யும். மாறாக, ஒருவருக்கு 95 ரூபாயும், ஒருவருக்கு 90 ரூபாயும், ஒருவருக்கு 50 ரூபாயும், ஒருவருக்கு ஒன்றுமே கொடுக்காமல் இருப்பது மேம்போக்காக சமத்துவமில்லாமல் நடத்துவதாக தோன்றினாலும் அதுதான் அந்த கூட்டத்தினரிடையே உள்ள அசமத்துவத்தைப் போக்கும். முதல் நடவடிக்கை சமநீதி என்றால், இரண்டாவது நடவடிக்கை சமூக நீதியாகும்.

ஏற்றத்தாழ்வு ஒன்றையே தனது அடிப்படையாகவும், இலக்கணமாகவும் கொண்டிருக்கிற, முடை நாற்றமெடுத்துப்போயிருக்கிற நீண்ட நெடிய காலமாக கெட்டி தட்டிப்போயிருக்கிற அசமத்துவ இந்திய சாதிய சமுதாயத்தை சீர்படுத்தும் நோக்கில் புரட்சியாளர் அம்பேத்கரும் கலகக்காரர் பெரியாரும் முகிழ்த்தெடுத்த கோட்பாடுதான் சமூக நீதிக்கோட்பாடு. சமூகநீதிக்கோட்பாட்டின் ஒரு துளி வெளிப்பாடுதான் இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீட்டோடு சமூக நீதி முடிந்து போகாது என்றாலும் சமூக நீதிக்கோட்பாட்டின் முதல் படியான இட ஒதுக்கீடே பல நிலைகளிலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

அவ்வாறாக, சமூகநீதிக்கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குபவர்கள், சமூக நீதிக்கோட்பாட்டினால் பலன் அடைந்தவர்களாக இருப்பதுதான் வேதனையாகும்.  

அதுபோக, சமூகநீதிக் கோட்பாடு என்பது நம்முடைய தலைவர்களின் கண்டுபிடிப்பு அல்ல. அது நம் கொள்கை எதிரிகளின் கண்டுபிடிப்பான மனுதருமக்கோட்பாட்டுக்கு பதிலடியாக கண்டுபிடித்ததே சமூக நீதிக் கோட்பாடாகும்.

அறிவியல் அடிப்படை ஏதும் இல்லாமல் பிறப்பின் அடிப்படையில் மனித குலத்தை நான்கு வருணங்களாக பிரித்ததோடு, ஒவ்வொரு வருணத்துக்கும் ஒவ்வொரு தொழிலை நிர்மாணித்து ஒவ்வொரு வருணத்தவரும் அவரவர் வருணத்திலேயே மண உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே மனுதருமம். அதற்கு நேர் மாறாக, எல்லா வருணத்தவரும் எல்லா தொழிலையும் செய்யலாம் என்பதற்கான அடித்தளத்தை அமைத்து தருவதே இட ஒதுக்கீட்டைத் தாங்கி நிற்கும் சமூக நீதிக்கோட்பாடாகும்.

இட ஒதுக்கீடு என்பது, காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்ட, இன்றைக்கு ஆதிக்க சாதிவெறியர்கள் என்று மீசை முறுக்கிக் கொள்கிற சூத்திரர்களுக்கும், பார்ப்பனீயத்துக்கு நேர் எதிரான வாழ்வியலை ஆரம்ப காலம் தொட்டே மேற்கொண்டு வந்ததால், சேரிகளில் சிறை வைக்கப்பட்டு தீண்டாமையையும் வன்கொடுமையையும் பரிசாகப் பெற்று வாழ்ந்து வருகிற பஞ்சமர்களுக்கும் ஒரு சில அரசு பதவிகளை உத்தரவாதப்படுத்துவதற்காகவோ, அதன் வாயிலாக அவர்களின் தனிப்பட்ட வாழ்வை வளமாக்குவதற்கோ, உருவாக்கப்பட்டது அல்ல.   

மாறாக, பார்ப்பனர் என்று அறியப்படுகிற வருணத்தவர் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் மரணச்செய்தி வாசிக்க வைக்கப்படுவதும், பஞ்சமர் என்று அறியப்படுகிற வருணத்தவர் இ.ஆ.ப அதிகாரியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தலைமையேற்க வைக்கப்படுவதும், சூத்திரர் என்று அறியப்படுகிற வருணத்தவர் நீதி சொல்கிற மன்றத்தில் தலைவராக அமர வைக்கப்படுவதுமே சமூக நீதிக்கோட்பாடாகும்.

ஆனால், இன்று இந்த வரலாற்றையெல்லாம் கற்றறியாமல், அதிகாரத்துக்கு வந்துவிட்ட சூத்திரர்கள் தங்களைப் படிக்க விடாமல் செய்த பார்ப்பன வருணத்தவர் மீது கோபம் கொள்ளாமல், சமூக நீதிக்கோட்பாட்டைத் தாங்கிப் பிடிக்காமல் மூளையால் பார்ப்பனர்களாக மாறி இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக இருக்கின்றனர்.

புரட்சியாளர் அம்பேத்கரும் கலகக்காரர் பெரியாரும் மறைந்து பல பத்தாண்டுகள் கடந்த பின்னரும் அந்த மகத்தான தலைவர்களுக்கான தேவை முடிந்து விடவில்லை. அவர்கள் தொடங்கி வைத்த சமூக நீதிக்கான போர் இன்று ஆதித்தமிழர்களான நம் கைகளில் இருக்கிறது. இந்தக் கருத்தியல் போரில் அரிவாளால் வெட்டுவதில் பயனில்லை. அறிவால் வெட்டுவோம் வாரீர்…!

-நீலவேந்தன்

ஏப்ரல் மாத ஆதித்தமிழன் இதழில் எழுதிய தலையங்கம்.

Wednesday, February 29, 2012

மாட்டுக்கறி
அரசியல்!
கடந்த
மாதம் நக்கீரன் வார இதழின் அட்டைப்படத்தில் வந்த ஒரு செய்தி கிட்டத்தட்ட தமிழ்நாட்டையே
உலுக்கிப்போட்டு விட்டது. “மாட்டுக்கறி தின்னும் மாமி” என்னும் தலைப்பில் தமிழக முதல்வரைப்பற்றி
வெளியான செய்தியைப் பார்த்தவுடன் அ.தி.மு.க வினர் நக்கீரன் அலுவலகத்தை அடித்து நொறுக்க,
ஆங்காங்கே நக்கீரன் இதழைக்கொளுத்த, தமிழ்நாடே பரபரப்பாகிப் போனது. நக்கீரன் மீதான தாக்குதலுக்குப்
பிறகு இது பத்திரிகை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் ஊடக சுதந்திரத்தின் மீதான
தாக்குதல் என்றும் ஒரு தரப்பினர் பேச ஆரம்பித்தனர். இன்னொரு தரப்பினரோ ஒரு தனிநபர்
மீது, அதுவும் ஒரு மாநில முதல்வர் மீது களங்கம் கற்பிக்கலாமா? ஊடக சுதந்திரம் என்ற
பெயரால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? பேச ஆரம்பித்தனர்.
ஆனால்,
ஒரு அம்பேத்கரிஸ்டாக இதில் நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால், இரண்டு தரப்பினரும்
ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்வது போலத் தோன்றினாலும் இருவரும் ஒரு கருத்தில் ஒற்றுமையாக
இருக்கின்றனர். அது, மாட்டுக்கறி சாப்பிடுவது கேவலம் என்பதில்தான். கருத்து சுதந்திரம்
பேசும் நக்கீரன், தமிழக முதல்வர் செய்யக்கூடாத பாவத்தை செய்தது போலத்தான் எழுதியது.
நக்கீரனுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தவர்களில் தினமணியின் தலையங்கம் உள்பட அனைவரும்
முதல்வர் மாட்டுக்கறி சாப்பிடுவதாக எழுதுவது மன்னிக்க முடியாத அவதூறு என்றே சொன்னது.
உடல்
நலத்துக்கு கேடானது என்று அச்சடிக்கப்பட்டிருக்கிற பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கிற
மதுவை அருந்துவது பாவமாக பார்க்கப்படுவதில்லை. ஆனால், எந்த சட்டத்தாலும் தடை செய்யப்படாத,
இந்தியத்துணைக்கண்ட மக்கள் தொகையில் கால் பங்கிற்கும் மேலான மக்களால் உண்ணப்படுகிற,
அமெரிக்க அதிபரின் விருந்திலும், இங்கிலாந்து அரச குடும்பத்து விருந்திலும் கட்டாயமாக
முதன்மையான இடம் பிடிக்கிற மாட்டுக்கறியை சாப்பிடுவது கேவலமாக பார்க்கிற இந்திய சமூகச்சூழலுக்கு
மிக முக்கிய காரணம் இங்கு உணவு பழக்க முறை சாதியத்தோடு முடிச்சு போடப்பட்டிருப்பதால்தான்.
மாட்டுக்கறி
தனிப்பட்ட முறையில் எந்தவொரு பாவமும் செய்யவில்லை, அது தலித்துகளால் சாப்பிடப்படுவதைத்
தவிர. இன்னும் சொல்லப்போனால், மலம் தின்னுகிற கோழியின் கறியை சாப்பிடுபவர்கள் தான்
புல் தின்னுகிற மாட்டின் இறைச்சியை சாப்பிடுபவர்களை கேவலமாக பார்க்கிறார்கள். மாட்டிறைச்சியைப்
போலவே ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிற மற்ற இரண்டு பொருட்கள் செருப்பும் துடைப்பமும்.
கத்தியால் குத்தப்பட்டாலோ, அரிவாளால் வெட்டப்பட்டாலோ, அதைப் பெருமிதமாக எடுத்துக்கொள்ளும்
சமூகம் காயம் கூட ஏற்படுத்திராத செருப்பால் அடிபட்டாலோ, துடைப்பத்தால் அடிபட்டாலோ,
இல்லை அடிப்பதாக சொன்னாலோ, உயிரே போய்விட்டதாக அவமானப்படுவதன் காரணமும் துடைப்பமும்
செருப்பும் செய்த எந்தவொரு தனிப்பட்ட குற்றத்தினாலும் அல்ல. அது தலித்துகளின் உழைப்புக்கருவியாக
இருப்பதினால்தான்.
முடை
நாற்றமெடுத்துப்போன சாதிய சமூகத்தில் தலித்துகள் மாத்திரமல்ல, தலித்துகள் சம்மந்தப்பட்ட
பொருட்களும் தீட்டாகிப்போனது. அறிவியல் அடிப்படை இல்லாத இந்த தீட்டுக்கற்பித்தலுக்கு
கம்யூனிஸ்டுகளும் பெரியாரிஸ்டுகளும் பலியாகிப்போனதுதான் ஆச்சர்யம். அறிவியல் நோக்கில்
மாட்டுக்கறியும் ஆட்டுக்கறியும் ஒன்றுதான் ஆனால் அறிவியலின் அடிப்படையால் உருவான கம்யூனிசத்தை
ஏற்றுக்கொண்டவர்களும் பகுத்தறிவின் விளைவான பெரியாரியத்தை ஏற்றுக்கொண்டவர்களும் உண்பதிலும்
குடும்ப நிகழ்வுகளிலும் அரசியல் நிகழ்ச்சிகளிலும் மாட்டுக்கறியை ஒதுக்கியே வைக்கின்றனர்.
ஒரு உணவுப்பொருளை, அதுவும் எளிமையாக கிடைக்கிற புரதச்சத்துமிக்க உணவுப்பொருளை அதன்
நன்மை தீமைக்காக ஒதுக்காமல், என்றைக்கோ கற்பிக்கப்பட்ட அறிவியல் அடிப்படை இல்லாத கற்பிதங்களின்
அடிப்படையில் ஒதுக்குவது முறையா என்று கருதிப்பார்க்க வேண்டும்.
அறிவியல்
மனப்பான்மை வளராமல், உணவுத்தீண்டாமை மட்டுமல்ல, எந்த பாகுபாடுகளும் ஒழியாது. ஒரு இடத்தில்
கீழ்க்கண்ட இரண்டில் ஏதோ ஒன்றுதான் இருக்க முடியும் அவை 1,அறிவு 2. சாதியக்கருத்தியல்.
சாதியக்கருத்தியலை
அடித்து நொறுக்கி அறிவைத்தழைக்கச் செய்தால் மட்டுமே ஒரு சமத்துவ சமுதாயம் அமைக்க முடியும்.
அப்படி ஒரு நீண்ட நெடிய போராட்டம் நடத்தவும் அந்தப்போரை தலைமையேற்க அம்பேத்கரிஸ்டுகள்
தயாராக வேண்டிய தருணமிது.
-நீலவேந்தன்.
கடந்த
மாத ஆதித்தமிழன் இதழில் தலையங்கமாக எழுதியது.