நான் கற்ற கல்வி
என் சமூக மக்களின்
விடுதலைக்குப்
பயன்படவில்லையெனில்
என்னை நானே சுட்டுக்கொள்வேன்
- புரட்சியாளர் அம்பேத்கர்.

Saturday, April 23, 2011

அம்பேத்கர் புரட்சியாளரே..!
நோய்நாடி நோய் முதல்நாடி என்பது தானே மருத்துவ இலக்கணம். சாதியின் தோற்றுவாயைத் தெரிந்து கொள்ளாமல் சாதியை ஒழிக்கப் புறப்பட முடியுமா? ஆனால் சாதியை கற்பித்த நூல்கள் எல்லாமே சமஸ்கிருதத்தில் அல்லவா இருக்கிறது? சூத்திரன் படித்தாலே காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றச் சொன்ன மனுதருமம், பஞ்ச மன் அம்பேத்கரை சமஸ்கிருதம் படிக்க விடுமா? ஆனாலும் பாடத்திட்டத்தில் இல்லாத போதும், மனுதருமம் தடுத்த போதும் சமஸ்கிருதத்தையும், புத்த இலக்கியங்கள் இருந்த பாலி மொழியையும் கற்றுக் கொண்டார்.


சாதியைக் கற்பித்த மனுதருமத்தையும், பகவத் கீதையையும் படித்ததினால்தான் மனு தருமத்தைக் கொளுத்தினார். நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் எனச் சொன்ன கீதையை முட்டாளின் உளறல் என்றார்.


வாழிடம் வேறானால் நாடு பிரிக்கிறது. கடவுள் வேறானால் மதம் பிரிக்கிறது. பொருளாதார நிலை வேறானால் வர்க்கம் பிரிக்கிறது. மொழி, பண்பாடு வேறானால் இனம் பிரிக்கிறது. உடலமைப்பு வேறானால் பால் பிரிக்கிறது. ஆனால், ஒரே நாட்டில் வாழ்ந்து கொண்டு, ஒரே கடவுளை வணங்கிக் கொண்டு, ஒரே பொருளியல் நிலையில், ஒத்த மொழி மற்றும் பண்பாட்டுடன், ஒத்த உடல மைப்புடன் வாழும் மனிதர்களை எந்த அடிப் படைக் காரணியும் இன்றி பிரித்து வைக்கும் சாதி எனும் மிக மோசமான நிறுவனம் எந்த அறிவியல் அடிப்படையும் இன்றி மூவாயிரம் ஆண்டுகளாக நீடிப்பது குறித்து ஆழமாக ஆய்ந்து, சாதி என்பது பண்பாட்டு விழுமியமே அன்றி வேறில்லை என்றார்.


சாதியை வரையறை செய்த சமூகவியல் வல்லுனர்கள் நிறைய உண்டு. ஆனாலும், அடைபட்ட வர்க்கமே சாதிமுறை. சாதி ஒழிப்பின்றி இந்தியப்புரட்சி சாத்தியமில்லை என்ற அம்பேத்கரின் வரையறை முழுமையானது என்றால் மிகையாகாது.


சாதியின் தோற்றம் மற்றும் அதன் இருப்பு ஆகியவற்றோடு தனது ஆய்வை நிறுத்திக் கொள்ளாமல், சாதி ஒழிப்பு குறித்தும் விரிவான ஆய்வை மேற்கொண்டார். 1932ம் ஆண்டு வாக்கில் பஞ்சாப்பில் ஜாத்-பட்-தோடக் மண்டல் எனும் அமைப்பு ஏற்பாடு செய்த சாதி ஒழிப்பு மாநாட்டில் பேசுவதற்காக தயார் செய்து வைத்திருந்து பேச முடியாமல் போன உரையை சாதி ஒழிக்க என்ன வழி எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டார்.


பின்னாளில் யாராவது என்னுடைய வழித்தோன்றல்கள் சொல்லிக் கொள்ள விரும்பினால், இந்த நூலைப் படித்து அதன்படி நடந்துகொள்ள வேண்டுமென்று அம்பேத்கர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மேற்கண்ட நூலை முழுவதும் படித்து சாரமாக்கிக் கூற விரும்பினால், இட ஒதுக்கீடு, அகமண முறை ஒழிப்பு, இந்து மத வெளியேற்றம் இம்மூன்றுமே சாதியை ஒழிக்கும் வழி என்பதேயாகும்.


இட ஒதுக்கீடு என்றால், 100 அரசு ஊழியர்களில் 18 பட்டியல் சாதியினரை அரசு ஊழியர் ஆக்குவது என்றும் அதன் வாயிலாக அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது என்றே பெரும்பாலும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு தொழிலுக்கு ஒரு சாதி என நியதி கற்பித்த மனுதருமத்துக்கு மாற்றாகத்தான் இட ஒதுக்கீட்டு கோட்பாட்டை அம்பேத்கர் முன்வைத்தார். இட ஒதுக்கீடு என்பது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த அல்ல, மாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக பொருளாதார வர்க்க அடிமை நிலையிலிருந்து விடுவித்துக்கொள்ளவே என்ற முதல் நோக்கில் இட ஒதுக்கீட்டை சாதி ஒழிப்புக்கு முதல் நிபந்தனையாக்கினார்.


சாதி அமைப்பினால் பாதிக்கப்பட்டோ ரையும் கூட சாதி அமைப்பைக் கட்டிக்காக்க வைத்ததுதான் சாதிய அமைப்பு முறையின் விந்தையான கட்டுமானம். தனக்கு மேலே எத்தனை சாதி இருந்தாலும் தனக்குக் கீழே ஏதாவது ஒரு சாதி இருந்தாலும் போதும் என்ற கழிசடையான திருப்தி மனநிலைதான் இன்றளவும் சாதியைத் தக்க வைத்து நீடித்து நிலைக்கச் செய்திருக்கிறது. தன் மீது திணிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக, வன்கொடுமைகளுக்கு எதிராக, இழிவுகளுக்கு எதிராக மூர்க்கமாக போராடும் பட்டியலிடப்பட்ட சாதியினர் கூட தன் சக பட்டியல் சாதியினரோடு திருமண உறவு கொள்வதில்லை. திருமண உறவுகளில் சாதித் தூய்மை கடைப்பிடிக்கிற தூய்மை வாதம் நீடிக்கிறவரை சாதி ஒழிப்பு என்பது கானல் நீரே என்று உணர்ந்த அம்பேத்கர் அவர்கள், அகமண முறை ஒழிப்பை சாதி ஒழிப்புக்கு இரண்டாம் நிபந்தனையாக்கினார். பொதுவாக எல்லா மதங்களும் மக்களை இணைக்கும். நாடு, மொழி எல்லைகளைக் கடந்து மக்களை இணைக்கிற வேலையைத் தான் எல்லா மதங்களும் காலம் காலமாக செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் தன் சொந்த மத மக்களை தங்களுக்குள் தீண்டிக் கொள்ளாமல், ஒருவருக்கொருவர் புழங்கிக் கொள்ளாமல் சாதி சொல்லி பிரித்து வைத் திருக்கிற ஒரே மதம் இந்து மதம்தான். எனக்கு எந்த சாதியும் கிடையாது, நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன் என்று யாராலும் சொல்லிக் கொள்ள முடியாது. இந்து என்று சொல்லிக் கொள்கிற யாரும் ஏதாவது ஒரு சாதியில் இருந்தாக வேண்டும் என்கிற கட்டுமானத் தைக் கொண்ட இந்து மதத்தில் நீடித்துக் கொண்டு சாதியை ஒழிக்க முடியாது என்று ஆய்ந்தறிந்த அம்பேத்கர் அவர்கள், இந்து மத வெளியேற்றத்தை சாதி ஒழிப்புக்கு மூன்றாவது நிபந்தனையாக்கினார்.


எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு பாடப்புத்தகங்களையும் நோட்டுப்புத்தகங்களையும் மட்டும் எடுத்துப்போன காலத்தில், உட்காருவதற்காக ஒரு கோணிப்பையை உடன் எடுத்துச் சென்று, தாகம் தணிப்பதற்குக் கூட மேல்சாதி மாணவனின் இரக்கத்தை எதிர்பார்த்து காத்திருந்து, ஒரு எருமை மாட்டிற்கு முடிவெட்டி விட்டாலும் விடுவேன், உனக்கு முடிவெட்டி விட மாட்டேன் என முடிதிருத்தும் நிலையத்தி லிருந்து துரத்தி அடிக்கப்பட்டு, தன் மூத்த சகோதரியிடம் முடிவெட்டிக்கொண்டு, வாடகைக் குதிரை வண்டியில் போகும்போது சாதியைத் தெரிந்து கொண்டதால் வண்டி யோடு தலைகுப்புறக் கவிழ்த்துவிடப்பட்டு மண்டை உடைக்கப்பட்டு என இளம்வயதில் அனைத்து விதமான தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளான போதும், அத்துனை இழிவு களையும் உரமாக்கிக் கொண்டு, வெளிநாடு களுக்கு சென்று சட்டம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பட்டம் பெற்று வந்து நாட்டின் அரசியல் சாசனத்தையே எழுதும் அளவுக்கு உயர்ந்தது, அம் பேத்கரின் அறிவுக்கு கிடைத்த அங்கீகாரம் மட்டுமல்ல, முருங்க மரம் விட்டத்துக்கு ஆகாது. சக்கிலியப்புள்ள பட்டத்துக்கு ஆகாது எனும் மனுதருமப் பழமொழிகளுக்கு கொடுத்த சவுக்கடியுமாகும்.


அரசியல் சாசனம் எழுதக் கிடைத்த வாய்ப்பை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, பெண்களுக்கு, தொழிலாளர்களுக்கு, சிறுபான்மை யினருக்கு என அனைத்து தரப்பட்ட மக்க ளுக்கும் பயன்படுத்தியது நீண்ட நெடிய செய்தி. சவுதார் குளத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் நீர் எடுக்க தடை விதிக்கப்பட்ட போது, நேரடியாகவே போராட்டக் களத்தில் இறங்கி ஒடுக் கப்பட்ட மக்களின் உரிமையை நிலைநாட்டியது உள்ளிட்ட போராட்ட வரலாறும் தனித்த நீண்ட செய்திகளாகும்.


இந்திய அரசியல் சாசனத்தை எழுதி முடித்து அரசியல் நிர்ணய சபையில் வைத்து உரையாற்றுகிறபோது, நாம் வருகிற ஜனவரி 26 (1950) முதல் ஒரு மனிதன் ஒரு வாக்கு எனும் அரசியல் சமத்துவம் நிலவப் போகிற புதிய சமூக அமைப்பில் நுழையப் போகிறோம். அந்த அரசியல் சமத்துவத்தைப் பயன்படுத்தி சமூக சமத்துவத்தை ஏற்படுத்த தவறினால் இந்த அமைப்பை தூக்கி எறியவும் மக்கள் தயங்க மாட்டார்கள் என்று அரசியல் நிர்ணய சபையில் நின்று முழங்கியவர் அம்பேத்கர்.


சமூக அமைப்பை வியாக்கியானம் செய்து கொண்டிருந்த தன் முந்தைய தலைமுறைக்கு மாற்றாக, சமூக அமைப்பை மாற்ற துணிச்சலுடன் போராடிய அம்பேத்கருக்கு புரட்சியாளர் என்ற அடைமொழியும் பொருத்தம்தான்.


புரட்சியாளர் அம்பேத்கர் கனவு கண்ட தீண்டாமை ஒழிந்த, சாதி ஒழிந்த சமூகம் இன்றளவும் அமையவில்லை. அவர் கனவு கண்ட சமூகம் அமைக்க, அவர் விட்டுச் சென்ற பணி முடிக்க வெறும் தலித்துகள் அணிதிரள்வதால் மட்டும் முடியாது.


தலித்துகளின் அவல நிலையைக் கண்டு, அய்யோ பாவம் என்று இரக்கப்படுபவர்களுக்கு மத்தியில், தலித்துகள் உரிமைகளைப் பற்றி முழக்கமிடும் போது, அந்த முழக்கங்களின் அடிப்படையில் உள்ள ஜனநாயக சமத்துவ வேட்கையைப் புரிந்து கொண்டு, தியாகத் தழும்புகளால் நிறைந்த தாய்மை உணர்வுடன் கூடிய முற்போக்கு எண்ணமும் புரட்சிகர நோக்கங்களும் சமூக நீதிக்கோட்பாட்டை, இட ஒதுக்கீட்டு பலனை தாண்டி புரிந்து கொள்கிற தாழ்த்தப்பட்டோர் அல்லாத இதர ஜனநாயக சக்திகளும் தலித்துகளும் தோழமையோடு அணி திரளும் போதுதான் புரட்சியாளர் அம்பேத்கர் கனவு கண்ட, தீண்டாமை ஒழிந்த, சாதி ஒழிந்த சமூகம் அமைக்க முடியும்.


அந்த இலட்சியப்பாதையில், சுயநலம் இல்லாமல், எந்தவித இழப்புகளுக்கும் தியாகங்களுக்கும் தயாராய் நடைபோடுவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

இன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள்